காதலனுடன் ரகசிய திருமணம்: பிரபல சீரியல் நடிகைக்கு பொலிசார் வலைவீச்சு

Author
Raju- inCinema
Report
239Shares

தமிழகத்தில் கணவனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல நடிகையை பொலிசார் தேடி வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தெய்வமகள், அரண்மணை கிளி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுசித்ரா.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஊரைச் சேர்ந்தவர் தேசிங்கு, இவர் சனிக்கிழமை அன்று தனது வீட்டைப் பூட்டி விட்டு, பூ அரும்பு பறிக்க சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன.

தேசிங்கின் புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியபோது தேசிங்கின் மகன் மணிகண்டனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் தான் நகை, பணத்தை திருடினார் என்பது அம்பலமானது. கார் ஓட்டுநரான மணிகண்டன் தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார்.

பின்னர் சென்னைக்கு வந்து டி.வி சீரியல் நடிகர் நடிகைகளை படப்பிடிப்புகளுக்கு அழைத்துச்செல்லும் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தெய்வமகள் சீரியலில் அகிலா குமார் வேடத்தில் நடித்த சுசித்ரா என்கிற டிவி நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நெருக்கமான நிலையில் வீட்டிற்கு தெரியாமல் நடிகை சுசித்ராவை ரகசிய திருமணம் செய்து கொண்ட மணிகண்டன், அங்கு தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு இல்லாததால் செலவுக்கு பணமில்லாமல் கடுமையான கஷ்டத்தில் தவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று சொந்த ஊருக்கு நடிகை சுசித்ராவை அழைத்து சென்றுள்ளார் மணிகண்டன், அப்போது வீட்டின் பீரோவில் நிறைய நகை மற்றும் பணம் இருப்பதை பார்த்ததும் அதனை எடுத்துச்சென்று விற்று அந்த பணத்தை கொண்டு தான் கதாநாயகியாக நடித்து குறும்படத்தை தயாரித்து, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து சம்பதித்து சொகுசாக வாழலாம் என்று திருட்டுக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் சுசித்ரா.

சுசித்ராவை சென்னையில் விட்டு விட்டு தனியாக சொந்த ஊருக்கு சென்ற மணிகண்டன் தன் தந்தையும், தாயும் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு செல்லும் வரை காத்திருந்து, அவர்கள் சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 சவரன் நகைகளையும், 50 ஆயிரம் ரூபாயையும் திருடியதாகவும், திருட்டு நகைகளை விற்ற பணத்துடன் மனைவிக்காக காத்திருந்த நிலையில் பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த விடயத்தை அறிந்த சுசித்ரா தலைமறைவாகியுள்ளார், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நடிகை சுசித்ராவின் உண்மையான பெயர் பரமேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.