போதைப்பொருள் வழக்கு விவகாரம் - 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது

Author
Nalini- inCinema
Report
0Shares

போதைப்பொருள் வழக்கு விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு திடீரென்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த ஜூன் 14ம் தேதி பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தன்னுடைய மகன் சாவுக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று கூறி, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. போலீசாரும், பணமோசடி புகார் குறித்து அமலாக்கத்துறையும் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரிக்க தொடங்கினர்.

இந்த விசாரணையில் நடிகை ரியா சக்ரவர்த்தி, சுஷாந்த் சிங்குக்காக போதைப்பொருள் வாங்கியது தெரியவந்ததையடுத்து அவர் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

ரியா சக்ரவர்த்தியின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் தீபக் சவாந்த் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடமும், இந்திப்பட தயாரிப்பாளர் மது மந்தேனாவிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பிரபல நடிகைகள் சிலரின் பெயரை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் இருப்பதாகவும், அவசியம் என்றால் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு திடீரென்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

ரகுல்பிரீத் சிங் இன்று ஆஜராகுமாறும், தீபிகா படுகோனேக்கு நாளை ஆஜராகுமாறும், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு சனிக்கிழமை ஆஜராகுமாறும் சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.