அந்த கடைசி 48 மணிநேரங்கள்... எஸ்பிபி-க்கு சிகிச்சையளித்த மருத்துவரின் உருக்கமான பதிவு

Author
Fathima- inCinema
Report
33Shares

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் தொற்றிலிருந்து மீண்டாலும் சிகிச்சை பலனின்றி கடந்த 25ம் தேதி காலமானார், அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன், இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார்.

அதில், ஆகஸ்ட் 3 அன்று, எஸ்.பி.பி. சார் எனக்கு போன் செய்தார். காய்ச்சல் இருப்பதாகக் கூறினார். கொரோனா பரிசோதனை செய்தோம். துரதிர்ஷ்டவசமாக கரோனா இருப்பது அதில் உறுதியானது.

அவர் வயதைக் கருதி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இங்கு எழுத விரும்பவில்லை.

கடந்த இரு மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

5 ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும், பிரபலம் போன்று ஒருமுறை கூட அவர் நடந்து கொண்டதில்லை, என்னையும் மற்ற நோயாளிகள் போல நடத்துங்கள், விசேஷமாக எதுவும் வேண்டாம் என அடிக்கடி கூறுவார்.

எங்கள் மருத்துவமனையில் நடந்த விழா ஒன்றுக்கு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், பத்மஸ்ரீ என்று போட்டதற்கு கூட சத்தம் போட்டார்.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு அதிகப் பிராண வாயு தேவைப்பட்டது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டியிருந்தது. இதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என எண்ணினேன், தீபக், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள் என்றார்.

அவருக்கு நினைவு திரும்பிய பின்னர் பல குறிப்புகள் எழுதினார், சிகிச்சையின் போது அனைவரையும் மரியாதையுடனே நடத்தினார்.

தினமும் 20 நிமிடம் எழுப்பி அமரவைப்போம், ஆனால் கடைசி 48 மணிநேரம் எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.

என்னால் முடிந்தவரை அவரை பார்த்துக் கொண்டேன், அவருக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்களும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.

எஸ்பிபி சாரின் குடும்பத்துடனும் நெருக்கமானோம், அவர்களது குடும்பத்திற்காக எப்போதும் உறுதுணையாக இருப்போம்.

உள்ளிருந்து தன்னடக்கத்துடனும் வலுவாகவும் எப்படி இருக்கவேண்டும் என்பதை எனக்கு எஸ்.பி.பி. கற்றுக்கொடுத்துள்ளார். போராளியாக இருந்து கடைசிவரை போராடினார்.

எஸ்.பி.பி. மிகவும் அருமையான மனிதர். உண்மையான சகாப்தம் என தெரிவித்துள்ளார்.