தமிழ் திரைப்பட குணசித்திர நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வந்த அவர் உதவி வேண்டி வெளியிட்ட வீடியோ பலரையும் மனமுடையச் செய்தது. அவருக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் வந்தன.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ சரவணன் தன்னுடைய மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நடிகர் தவசி காலமானார்.
அவரின் மறைவுக்கு நடிகர் ரோபோ சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரோபோ ஷங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தவசி அண்ணனை கடைசியாகப் பார்த்த ஆள் நான்தான். அதன் பிறகு யார் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் இறப்பு செய்தியை கேட்டு மிகவும் துயரமுற்றேன். இப்பதானே பார்த்துவிட்டு வந்தோம்; தான் திரும்ப வருவேன் என்று உறுதியாகக் கூறிய அவர் இறந்து விட்ட செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
திரையுலக கலைஞர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன், நல்ல கலைஞர்களை, நம் திரையுலகைச் சேர்ந்த யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக தயவு செய்து உதவி செய்யுங்கள்.
அண்ணனுக்கு முன்னதாகவே நாம் உதவி செய்திருந்தால் அவர் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று உருக்கமாக கூறியுள்ளார்.