வீட்டில் தனியாக இருந்த 20 வயது மாணவியை கொன்றது ஏன்? கொத்தனார் திடுக்கிடும் வாக்குமூலம்

Author
Nalini- inCommunity
Report
1625Shares

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை நகைக்காக கொலை செய்ததாக கொத்தனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு மீனா (வயது 20) என்ற மகள் உள்ளார்.

இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மேலும், மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை, செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த 4 தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, விசாரணையில் அவர் மாணவி மீனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அப்போது அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், போரூரில் தங்கியிருந்த நான் கடந்த சில வாரங்களாக மாணவி மீனாவின் வீட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தேன்.

அப்போது எனக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. பணத்தேவை இருந்ததால் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளானேன்.

இதனால் வீட்டில் இருந்த மீனாவின் கழுத்தில் உள்ள நகையை பறிக்க திட்டம் போட்டேன். அதனால் நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர்களது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, மீனாவின் தாய் தனலட்சுமி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெளியே சென்றனர். அந்த நேரம் பார்த்து மீனாவை மிரட்டி கழுத்தில் உள்ள நகையை கழற்ற முயற்சி செய்தேன்.

அதற்கு மீனா நகையை தர மறுத்து கூச்சல்போட்டார். இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் மீனாவின் வாயை மூட முயன்றி செய்தேன். அவர் தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். நான் மாட்டிவிடுவேனோ என்ற பயத்தில் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து மீனாவின் தொண்டையில் குத்தினேன். இதில் மீனா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார்.

இதனால் பயந்த நான் என்ன செய்வதென்று தெரியாமல் மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.

அதன்பின்னர், போரூரில் நான் தங்கியுள்ள அறைக்கு சென்று அங்கிருந்த எனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் அய்யப்பந்தாங்கலில் உள்ள நகைக்கடைக்கு சென்று நகையை அடகு வைத்து பணம் வாங்கினேன்.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளிலேயே திருவண்ணாமலையில் உள்ள எனது வீட்டிற்கு தப்பி சென்று விடலாம் என்ற நினைத்த நிலையில், போலீசார் என்னை விழுப்புரத்தில் மடக்கி பிடித்து விட்டனர் என்றார்.

இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து நகை, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.