வீட்டுக்குள் பூட்டி வைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்: நெஞ்சை பதறவைக்கும் காட்சி

Author
Fathima- inCommunity
Report
0Shares

தமிழகத்தில் மனைவியை கட்டி வைத்து, அரிவாளால் வெட்டி சித்ரவதை செய்ததோடு, அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் ராஜன்(53)- ஹெப்சிபாய்(40). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குழந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த 2-ஆம் திகதி ஹெப்சிபாய் இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார்.

சுரேஷ் ராஜன் ஏற்கனவே மனைவி மீது சந்தேகம் கொண்டவர் என்பதால், ஹெப்சிபாய் இந்த அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரின் சந்தேகம் அதிகமாகியுள்ளது.

இதனால், வீட்டில் பூட்டிவைத்து, வெளியில் என்ன நடந்தது ? யாரிடமெல்லாம் பேசினாய்? என சந்தேகத்துடன் கேட்டபடி இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ தினத்தன்று, வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் உள்ளேயிருந்து ஹெப்சிபாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டிய சிறிது நேரத்தில் ஹெப்சியின் சத்தம் சுத்தமாக அடங்கியது.

வீட்டுக்குள் இருந்து பெட்ரோல் வாடை வீசியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பொலிசார், அக்கம் பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து கதவை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில், உள்ளே கையில் அரிவாள் கத்தியுடன் சுரேஷ்ராஜன் நிற்க, எதிரே நாற்காலியில் உடல் முழுவதும் கயிற்றால் சுற்றிக் கட்டப்பட்டு திமிறிக் கொண்டிருந்தார் ஹெப்சிபாய். அவரது கை, கால், கண், வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்தினரைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த அரிவாளை தூக்கிப் போட்டுவிட்டு, தனக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போல சட்டையில்லாமல் சுரேஷ்ராஜன் நின்றுள்ளார்.

உடனடியாக அவரது கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன. ஹெப்சிபாயின் காலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயம் இருந்தது, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்தது.

நீதிமன்றப் பணிக்கு சென்ற பின்னர் ஹெப்சிபாயை பின்தொடர்ந்து சென்று, அவர் யார் யாருடன் பேசுகிறார் என்பதை நோட்டமிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த சுரேஷ்ராஜன், குழந்தை இல்லை என்ற குறையை மறைக்க மனைவியை சந்தேகப்பட்டு சித்ரவதை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று மனைவியை கட்டிவைத்து அரிவாளால் வெட்டியபோது அவர் அலறியதால் உடனடியாக வாயில் துணியை கட்டியதோடு, அவரை எரித்துக் கொல்லும் திட்டத்துடன் கண்ணையும் கட்டி பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

சரியான நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றதால் ஹெப்சிபாயை உயிரோடு மீட்க முடிந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.