அனாதையாக இறந்த முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த முன்னாள் எம்எல்ஏ

Author
Nalini- inCommunity
Report
0Shares

மயிலாடுதுறையில் யாருமில்லாமல் இறந்த முதியவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து மனிதநேயம் காட்டியிருக்கிறார் மயிலாடுதுறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அக்.5-ம் தேதியன்று மாலை முகத்திலும் காலிலும் அடிபட்ட நிலையில் 80 வயது முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார்.

அப்போது அந்த முதியவர் மேல் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. இதனையடுத்து சமூக ஆர்வலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு அப்பர் சுந்தரம், கிங்பைசல், ஜோதிராஜன் உள்ளிட்டோர் சென்றனர். திமுகவைச் சேர்ந்த மயிலாடுதுறை முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் ஆலோசனையின்படி அவரை மீட்டு 108 வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த முதியவருக்கு சமூக ஆர்வலர்கள் இயன்ற மருத்துவ உதவிகளையும், ஏனைய உணவு, உடை போன்றவற்றையும் கொடுத்து நேரில் கண்காணித்து வந்துள்ளனர். அந்த முதியவரின் உறவினர்களை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த முதியவரின் பெயர் சங்கர் ராவ் என்பதும், மேட்டூர் கெமிக்கல் காலனியில் வசிப்பவர் என்றும் தகவல்கள் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மயிலாடுதுறை வழக்கறிஞர் முத்துக்குமாரின் முயற்சியால் மேட்டூர் முகவரியில் முதியவரின் உறவினர்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடப்பட்டது. முதியவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். அவர் புனேவில் இருப்பதும் தெரியவந்தது.

அப்போது சகோதரிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது அண்ணனுக்கும், எனக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை, முற்றிலும் அவரைக் கைவிட்டுவிட்டதாக சகோதரி தரப்பில் பதில் சொல்லப்பட்டது. அதனால் சமூக ஆர்வலர்களே முதியவரின் அனைத்துத் தேவைகளையும் கவனித்து வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு முறைப்படி அடக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. உறவினர்கள் இருந்தும் அனாதையாக இறந்த முதியவர் உடலை அடக்கம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்களுடன் மயிலாடுதுறை காவல்துறையும், ஜெகவீரபாண்டியனும் இணைந்தனர்.

அரசு மருத்துவமனையில் இருந்து முதியவரின் உடலைப் பெற்று, உடலுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து, தீப்பாஞ்சி அம்மன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, அங்கு இறுதிச் சடங்குகளை ஜெகவீரபாண்டியன் முன்னின்று செய்தார். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர், உறவினர்கள் செய்ய வேண்டிய மற்ற இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்து முதியவரை அடக்கம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து முதியவர்களை பராமரிக்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள முதியோர் இல்லங்களிலாவது ஒப்படைக்க வேண்டும் என்று ஜெகவீரபாண்டியன் கேட்டுக் கொண்டார்.