கொரோனா பாதித்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

Author
Nalini- inCommunity
Report
1509Shares

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந்தேதி இரவு சேலத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்கு சென்றார்.

விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென்று மூச்சு விடுவதில் அவருக்கு கடுமையான சிரமம் ஏற்பட்டது.

அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பை சரி செய்ய டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

திடீரென அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. இதய பாதிப்பும் ஏற்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளன. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து இருப்பதாகவும் எக்மோ கருவி சிகிச்சையிலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன.