தொண்டையில் சிக்கிய டியூப் லைட் துகள்கள்!’ -ஹோட்டல் சாப்பாட்டில் அதிர்ச்சி

Author
Praveen Rajendran- inCommunity
Report
3495Shares

வேலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் பரிமாறிய உணவில் டியூப் லைட் துகள்கள் கிடந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியை அடுத்துள்ள அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது மகளுக்கும், விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் செய்துவைக்க இருவீட்டு பெரியோர்களும் முடிவுசெய்தனர்.

சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ‘ஜுனியர் குப்பண்ணா’ என்கிற ஹோட்டலில் உள்ள பார்ட்டி ஹாலில் இன்று பிற்பகலில் திருமண தேதியை குறித்து நிச்சயதார்த்தம் நடத்தினர்.

இதையடுத்து, ஜுனியர் குப்பண்ணா ஹோட்டலில் தயாரான சாம்பார் சாத உணவையே 100 பேருக்கு ஆர்டர் கொடுத்து சாப்பிட உட்கார்ந்தனர். ஹோட்டல் ஊழியர்களே உணவையும் பரிமாறினர்.

சாம்பார் சாதத்தை பிசைந்து சாப்பிட்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொண்டையில், ஏதோவொரு பொருள் சிக்கி வலியை ஏற்படுத்தியது.

‘சைவ சாப்பாட்டில் மீன் முள்ளா’ என்று அதிர்ச்சியடைந்து மேலும் சாப்பாட்டை பிசைந்து பார்த்துள்ளனர். அப்போது, உடைந்த டியூப் லைட் பல்புகளின் துகள்கள் இருந்தன. உடனடியாக அனைவரும் சாப்பிடாமல் எழுந்து கொண்டனர்.

இதுகுறித்து, ஜுனியர் குப்பண்ணா ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஹோட்டல் தரப்பில் பொறுப்பில்லாமல் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த மணமக்கள் வீட்டார் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, சத்துவாச்சாரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மணமக்கள் வீட்டார், ‘‘ஒரு சாப்பாட்டின் விலை 160 ரூபாய். நூறு பேருக்கு ஆர்டர் கொடுத்தோம். கவனக்குறைவாக சாப்பாட்டில் டியூப் லைட் துகள்கள் இருப்பதை விட்டுள்ளனர். சாப்பாடு பரிமாறியவரும் நக்கலாக பேசுகிறார். டியூப் லைட் ஓடுகள் வயிற்றுக்குள் சென்ற சிலருக்கு வயிறு வலிப்பதாகச் சொல்கிறார்கள்.

குழந்தைகளும் அந்த உணவை சாப்பிட்டனர். உணவில் பல்லியோ, வேறு ஏதாவது விழுந்தாலும் இப்படித்தான் அலட்சியமாக பேசுவார்கள் என்று நினைக்கிறோம். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஹோட்டல் தரப்பில் கேட்டபோது, ‘‘தவறுதலாக டியூப் லைட் துகள்கள் விழுந்துள்ளது. யாராவது வேண்டுமென்றே செய்வார்களா? சாப்பிட்டவர்களுக்கு உடலில் ஏதாவது பிரச்னையென்றால் ஹோட்டல் நிர்வாகமே அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும்’’ என்றனர்.