தமிழ்மொழியில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் காலமானார் - தலைவர்கள் இரங்கல்

Author
Nalini- inCommunity
Report
503Shares

ரஷ்யாவை சேர்ந்த பிரபல தமிழ் அறிஞர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 79.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

1941ம் ஆண்டு ஏப்.27ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைகழகத்தில் 1970 ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.

1978 ம் ஆண்டு முதல்முறையாக இந்தியா வந்து டுபியான்ஸ்கி, சென்னை பல்கலையில், 9 மாதங்கள் தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இதில் தமிழ் மொழி மீது அவர் கொண்ட ஆர்வம் அதிகரிக்க, ரஷ்யராக இருந்தும், தமிழ் மொழியில் புலமை பெற்றார். தமிழ் மற்றும் இந்திய கலாசாரத்தில் புலமைவாய்ந்தவராக திகழ்ந்தார்.

தமிழில் சரளமாக பேசும் அவர், சமஸ்கிருதம் மொழியையும் படித்து அறிந்தார். 1973ல் ரஷ்ய பல்கலையில், பணியில் சேர்ந்தார். அதே பல்கலையில், தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக ரஷ்யாவில் 10 பல்கலையில் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி சார்ந்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவர் எழுதியிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டு, ஆரம்பகால தமிழ் கவிதைகளில் சடங்கு மற்றும் புராண ஆதாரங்கள் என்ற புத்தகத்தை எழுதினார்.

பல முறை தமிழகம் அலெக்சாண்டர் வந்துள்ளார். இவர் இசைக்கலைஞராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன், அறிஞர் சிவத்தம்பி மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர், டுபியான்ஸ்கியின் நெருங்கிய நண்பர்களாக ஆவர்.