2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தாய்: வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்து கொலை

Author
Fathima- inCommunity
Report

மதுரையில் கணவரை இழந்த பெண் ஒருவர், தன்னுடைய 2 மகள்களுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண், இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு அகீதா, ப்ரீத்தி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அருண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார், ஏற்கனவே கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த குடும்பத்தினருக்கு, அருணின் இழப்பு மீளா துயரத்தை தந்தது.

கடனால் மனக்கஷ்டம் அதிகரிக்க, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் வளர்மதி, இதன்படி தங்கள் கை நரம்புகளை பிளேடால் வெட்டிக் கொண்டு மூவரும் தற்கொலைக்கு முயன்றனர்.

ஆனால் உயிர் பிரிய தாமதமானதால் ஒரே கம்பியில் மூன்று புடவைகளை மாட்டி மூவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக தாங்கள் செல்லமாக வளர்த்த உயர் ரக நாயையும் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை நடத்தியுள்ளார்.

தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில், அருணின் பிரிவு தங்களை கடுமையாக பாதித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தாங்கள் வளர்த்து வந்த மேகலா(வளர்மதியின் தம்பி மகள்) என்ற சிறுமியை தங்கள் முடிவுக்கு கொண்டுவர எந்த உரிமையும் இல்லை என்பதால் அவரை மட்டும் கீழ் வீட்டில் உறங்க வைத்ததாகவும், தங்களின் சொத்துக்களை வைத்து அந்த சிறுமியை பாதுகாக்குமாறும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளனர்.