கொரோனாவை தொடர்ந்து பரவுக் கேட் கியூ வைரஸ்.! மனிதர்களுக்கு ஆபத்தா?

Author
Mohan Elango- inHealth
Report
179Shares

கடந்த ஜூலை மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் கேட் கியூ வைரஸுக்கு (Cat Que virus (CQV)) என்கிற புதிய வைரசுக்கு எதிரான ஆன்ட்டிபாடிகள் இருப்பதை விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வை புனேவை மையமாக கொண்ட மேக்சிமம் கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் ஐசிஎம்ஆர்-தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து மேற்கொண்டது.

சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸின் மாதிரிகள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் குலெக்ஸ் கொசுக்களிலும் வியட்நாமில் பன்றிகளிலும் இந்த கேட் கியூ வைரஸ் பெரும்பாலும் இருப்பது பதிவாகியுள்ளது.

இந்த ஆய்வுக்காக, 2014-2017-ம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கடுமையான காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட 1020 மனித சீரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் அனைத்தும் நிகழ் நேர RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது CQV-க்கு எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட 883 மாதிரிகளின் ஆன்டிபாடிகள் சோதனையில், இரண்டு பாசிட்டிவ் ஆன்டிபாடி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மாதிரிகள் 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கர்நாடகாவிலிருந்து எடுக்கப்பட்டவை.

குறிப்பிடத்தக்க வகையில், 1961-ம் ஆண்டில் கர்நாடகாவின் சாகர் மாவட்டத்தில் ஓர் காட்டு மைனா சீரம் மாதிரியிலிருந்து ஒரு வைரஸ் தனிமைப்படுத்தப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அடுத்த தலைமுறை வரிசை முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2016-ன் CQV என வகைப்படுத்தப்பட்டது.

2017-2018-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தியாவில் குலெக்ஸ் கொசுக்களின் பரவலால் தூண்டப்பட்ட CQV கண்டறியும் சோதனைகளை உருவாக்க மேற்கொள்ளப்பட்டது.

கேட் கியூ வைரஸ் உள்நாட்டுப் பன்றிகளில் தான் முதன்மையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில், உள்நாட்டில் வளர்க்கப்படும் பன்றிகளில் இந்த வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பன்றிகள் மற்றும் பிற விலங்குகளுக்குப் பரவும் திறனைக் கொண்டுள்ளது என்பதையும் ஆய்வு குறிப்பிடுகிறது. 2015-ல் வெளியான வெக்டர் போர்ன் மற்றும் ஜூனோடிக் நோய்கள் (Vector Borne and Zoonotic Diseases) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் CQV, சிம்பு சீரோகுரூப்பைச் (Simbu serogroup) சேர்ந்தது என்றும் மனிதர்களுக்கும் பொருளாதார ரீதியாக முக்கிய கால்நடை இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு, வடக்கு வியட்நாமில் அர்போவைரஸ் பரவியபோதும், 2006 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் சீனாவில் சேகரிக்கப்பட்ட கொசு மாதிரிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு CQV strain (SC0806) கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கொசுக்கள் மூலமாகவும் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். இந்த ஆய்வில், மனித சீரம் மாதிரிகளில் பாசிட்டிவ் மற்றும் கொசுக்களில் CQV-ன் நகலெடுக்கும் திறன் காரணமாக, இந்தியச் சூழ்நிலையில் CQV-ன் “சாத்தியமான நோய் உருவாக்கும் திறன்” மட்டுமே உள்ளது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் பன்றி மற்றும் காட்டு மைனாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட CQV போன்றவை, இந்தியாவில் ஆர்த்தோபன்யவைரஸ் (Orthobunyavirus) ஓர் பொதுச் சுகாதார நோய்க்கிருமியாக இருப்பதைக் குறிக்கிறது” என்று ஆய்வு கூறுகிறது (CQV Orthobunyavirus வைரஸ் இனத்தைச் சேர்ந்தது).

இந்த வைரஸ் ஆபத்தானது என உறுதிபடுத்தப்படவில்லை. மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய Cache valley வைரஸ், பீடியாட்ரிக் என்செஃபலிட்டிஸை (paediatric encephalitis) ஏற்படுத்தக்கூடிய லா கிராஸ் (La Crosse) வைரஸ், ஜேம்ஸ்டவுன் கேன்யன் என்செஃபலிட்டிஸை ஏற்படுத்தும் ஜேம்ஸ்டவுன் கேன்யன் (Jamestown Canyon) வைரஸ் மற்றும் febrile illness நோயை ஏற்படுத்தும் குவாரோ (Guaroa) உள்ளிட்டவை CQV போன்ற அதே இனத்தைச் சேர்ந்த மற்றும் கொசுக்கள் வழியாகப் பரவும் பிற வைரஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது.