சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி உயர்நீதிமன்றம்

Author
Mohan Elango- inIndia
Report

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின.

இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.

இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது.

இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இதன் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 244-வது பிரிவின் கீழ், நிலம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணை அதிகாரியான உச்ச நீதிமன்ற செயலாளர் (பதிவு அதிகாரி), வருமான வரித் துறை துணை ஆணையர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சாட்சிகளை அழைத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருந்தார்.

ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என கடந்த 11-ம் தேதி விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்கைத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, சுவாமி மனு மீது வரும் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு உத்தர விட்டார்.