பாகிஸ்தானுக்கு அவமானமே மிச்சம் - கார்கில் யுத்தம் குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப் பகிரங்கம்

Author
Mohan Elango- inPolitics
Report
558Shares

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு முன்பாக ஊழல் குற்றச்சாட்டுகளால் தண்டிக்கப்பட்டிருந்தார்.

அதே சமயத்தில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றாக பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளன.

இம்ரான் அரசு மீதும் இராணுவத்தின் மீதும் நாளுக்கு நாள் அழுத்தம் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளார் நவாஸ் செரிப்.

லண்டனில் சிகிச்சை பெற்று வருபவரை எப்படியாவது பாகிஸ்தானுக்கு கொண்டு வர இம்ரான் அரசு முயன்று வருகிறது. லண்டனில் இருந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் நவாஸ் செரிப் பேசி வருகிறார்.

அதில் இராணுவத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தற்போது கார்கில் யுத்தம் பற்றி தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

கார்கில் போர் நடைபெற்ற சமயத்தில் நவாஸ் செரிப் தான் பிரதமராக இருந்தார். கார்கில் யுத்தத்தால் பாகிஸ்தான் பெற்றது எதுவுமே இல்லை.. அவமானமே மிச்சம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “இராணுவம் கார்கில் யுத்தத்தை தொடங்கவில்லை. சில இராணுவ தளபதிகள் தான் இதற்கு பின்னால் இருந்தனர். இதனால் நாம் நம்முடைய வீரர்களை இழந்தோம். நம் வீரர்களிடம் போதிய ஆயுதங்கள் கூட இருந்திருக்கவில்லை.

யுத்தத்துக்கு காரணமான இராணுவ தளபதிகள் எங்கே தாம் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எனது ஆட்சியை கவிழ்த்தனர்” என்று பேசியுள்ளார்.