சசிகலா வருகை: அமமுக செயற்குழு, பொதுக்குழு பிப்ரவரி 25-ம் தேதி கூடுகிறது

Author
Mohan Elango- inPolitics
Report

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையாகி பிப்.9 ஆம் தேதி சென்னை வந்தார். தற்போது திநகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.

நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சசிகலா தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை மௌனம் காத்து வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ள நிலையில் சசிகலாவின் நிலைப்பாடு குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்கு சாத்தியம் உள்ளது அதற்கான சட்ட தீர்வுகளை ஆராய்ந்து வருகிறோம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.

This image has an empty alt attribute; its file name is tttv.jpg

கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா வெளிவந்த பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அதில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.