அடுத்த வருஷமும் தோனி கேப்டனாக தொடர்வார் - சி.எஸ்.கே நிர்வாகம் நம்பிக்கை

Author
Mohan Elango- inSports
Report
1456Shares

2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார் என உறுதியாக நம்புவதாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

வீரர்கள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த சீசனில் ஐபிஎல் தோல்வி அடுத்த ஆண்டும் தோனி தொடர்வாரா என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனியே தலைமை தாங்குவார் என உறுதியாக நம்புவதாக அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'ஐபிஎல் போட்டியில் தோனி எங்களுக்காக பல முறை வெற்றி பெற்றிருக்கிறார். ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இதுவே முதல்முறை. இந்த ஆண்டில் இதுபோல் நடந்தது என்பதற்காக, எங்களால் இனி எதையும் மாற்ற முடியாது என்று அர்த்தமில்லை.

இந்த சீசனில் எங்கள் அணி சரிவர விளையாடவில்லை" என்றார். இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு புதிய வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.