இந்திய அணியிலிருந்து பும்ராவும் விலகல்: நடராஜனுக்கு வாய்ப்பா?

Author
Fathima- inSports
Report

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவும் விலகியுள்ளதால் நடராஜன் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால், பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே பும்ரா இல்லாத நிலையில் தமிழக வீரர் டி.நடராஜன் அணிக்குள் வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வரும் 15-ம்தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில், சிராஜ், ஷைனி, ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.

ஏற்கனவே காயம் காரணமாக இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.