அறிமுக டெஸ்ட்டில் சாதித்த நடராஜன்: ஐசிசி புகழாரம்

Author
Fathima- inSports
Report

ஒரே பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன் தான் என புகழாரம் சூட்டியுள்ளது ஐசிசி.

பிரிஸ்பேனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார் நடராஜன்.

ஐபிஎல் 13வது சீசனில் யார்க்கர் பந்துவீச்சின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று தொடர் சாதனைகளை படைத்து வருகிறார்.

முன்னதாக அணியில் இடம்பெறாவிட்டாலும், வெற்றி தேவைப்பட்ட போது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து டி20 போட்டியிலும் விளையாடி இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அடுத்ததாக டெஸ்ட் போட்டியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காத என ரசிகர்கள் நினைத்த போது, நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார்.

இந்த விக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய கையோடு ரஹானேவினால் கேட்ச் விடப்பட்ட லபுஷேன் விக்கெட்டையும் சாய்த்தார்.

தற்போது 20வது ஓவரை வீசி வரும் நடராஜன் 2 மெய்டன்களுடன் 58 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ஐசிசி ட்விட்டரில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நடராஜனை வரவேற்கிறோம். ஒரே பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன்தான்” எனப் பாராட்டியுள்ளது.