72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி

Author
Fathima- inTamilnadu
Report
794Shares

செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதியே அவரது உடல்நிலை மோசமடைய உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் உடல்நிலை தேறிய வந்த போதும், நேற்று முன்தினம் மாலை நிலைமை மோசமடைந்தது.

உடல் முழுவதும் தொற்று பரவிய நிலையில், கார்டியாக் அரெஸ்டால் உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்றிரவே பண்ணை வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று காலை பிரபலங்கள், பொதுமக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதனைதொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு 11 மணியளவில் தொடங்கியது, தமிழக அரசு சார்பில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

காவல்துறை அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், காவல்துறை சார்பில் 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.