அமித்ஷா இன்று சென்னை வருகை - தாரை தப்பட்டையுடன் கோலாகல வரவேற்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்

Author
Nalini- inTamilnadu
Report
972Shares

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.

விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

இதில், தமிழக பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு, அங்கிருந்து காரில், மத்திய மந்திரி அமித்ஷா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்கிறார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கின்றனர்.

இதனையடுத்து, 14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க் கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் எந்த அனுமதியும் இன்னும் வழங்கப்படவில்லை. இருந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பின்னர், மாலை 4.15 மணிக்கு கலைவாணர் அரங்கத்துக்கு அமித்ஷா வருகிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரமுகர்கள் பட்டியலில் இருப்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையம் முதல், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரையில் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.