நிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை

Author
Mohan Elango- inTamilnadu
Report

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக மாறி நாளை மாலை கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் (புதன்கிழமை) அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாபலிபுரம் -காரைக்கால் இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று எழிலகத்தில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

நிலைமையைப் பொறுத்து விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார் முதல்வர்.