தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்: மிக அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தமிழகத்திற்கு வருகிற டிசம்பர் 1,2 மற்றும் 3 ம் தேதி ஆகிய நாட்களை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் நிலையில் உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது,

நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வானது அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு இந்தியா பெருங்கடலை ஒட்டியுள்ள பூமத்திய ரேகை பகுதியில் தற்போது மையம் கொண்டுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 2-ம் தேதி தென் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக் கூடும்.

இதனால் நவ.29 மற்றும் நவ.30ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.1ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் .

டிச.2ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் மிக கனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.3ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் 29ம் தேதியன்று தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.