புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்.. தென் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Author
Mohan Elango- inTamilnadu
Report

தமிழகத்தை நிவர் புயல் தாக்கிச் சென்ற ஒரு சில தினங்களிலே புரெவி புயல் தாக்க இருக்கிறது. இந்த புயல் தென் தமிழகத்தில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் சின்னம்திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலையில் கரையைக் கடக்கும் புயல், பின்னர் குமரிக்கடல் நோக்கி வரும். இதனால் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் அதீத கனமழை பெய்யும். நாளை மாலை இரவில் 'புரெவி' புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் புன்னெச்சரிக்கை குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தில் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.

நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

தென் தமிழகத்தில் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.