‘புரெவி’ புயல் 4ம் தேதி கரையை கடக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

Author
Nalini- inTamilnadu
Report

வங்க கடலில் கடந்த வாரம் நிவர் புயல் உருவாகி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த மாதம் 28-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘புரெவி’என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. 2ந் தேதி (இன்று) இலங்கை கடலோர பகுதியை அடைந்து, 3-ந்தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4-ந்தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

3-ந்தேதி (நாளை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.