பிரித்தானியாவிலிருந்து தமிழகம் வந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,28,287 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 62,409 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,47,00,898 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,28,368 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 71 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 26 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.