மன்னார்குடி குடும்பம் மாஃபியா தான்: சசிகலா பற்றிய கருத்துக்கு குருமூர்த்தி விளக்கம்

Author
Mohan Elango- inTamilnadu
Report

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை நிகழ்வில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி சசிகலா தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது.

இதில் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கும் நிகழ்வின்போது, அனந்தராமன் என்ற வாசகர், "பா.ஜ.க. - தினகரன் - சசிகலா கூட்டணி வரும் என்று சொன்னால் சரியா, தேர்தலுக்குப் பிறகு அதிமுக இணைய வாய்ப்பு உண்டா?" என்று கேட்டார்.

”வீடு பற்றி எரிகிறபோது, கங்கை ஜலத்துக்கு காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் ஷௌரி ஒருமுறை கூறியிருந்தார்.

அதே மாதிரிதான் அது சசிகலாவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. ஒரு அணி என திரளும்போது, கங்கை ஜலத்திற்கு காத்திருக்க முடியாது. எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என தோன்றுகிறது" என்று பதிலளித்தார் குருமூர்த்தி.

இது கடும் சர்ச்சைக்குள்ளாகவே தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அமமுகவை நான் இன்னும் மன்னார்குடி மாஃபியா என்றே கருதுகிறேன். அவர்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியின் அங்கமானால்கூட, சந்திராசாமியை சாக்கடை என்று கருதியதைப்போல, இவர்களை மாஃபியா என்றே கருதுகிறேன். துக்ளக்கைப் பொறுத்தவரை மன்னார்குடி குடும்பத்தை மாஃபியா என்றே கருதுகிறோம்.

அ.தி.மு.கவை அவர்கள் தி.மு.கவைப் போல குடும்பக் கட்சியாக மாற்றிவிடுவார்கள். இதுதான் எங்கள் நிலைப்பாடு. சாக்கடையோடு ஒப்பிடப்பட்ட சந்திராசாமியோடு ஒருவரை ஒப்பிடும்போது, அது எப்படி அவர்களை நான் ஆதரிப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது?" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.