சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா இன்னும் சில தினங்களில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
சசிகலாவின் வருகை தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. முதலில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருந்தது.
ஆனால் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தற்போது சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவருக்கு பத்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் சசிகலா விடுதலையாவது மேலும் தள்ளிப்போகலாம் எனச் சொல்லப்படுகிறது.