ட்ரம்ப் திடீர் மனமாற்றம்! பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்!

Author
Nalini- inWorld
Report

பைடன் அதிபராகப் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 306 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றார். டொனல்ட் டிரம்ப் 232 தேர்தல் சபை உறுப்பினர்களை மட்டுமே பெற்றார். அமெரிக்காவில் ஆட்சியமைக்க 270 தேர்தல் சபை உறுப்பினர்களை பெற வேண்டும். அதில் ஜோ பைடன் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.

ஆனால், இந்த தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்தார். தொடர்ந்து தான்தான் வெற்றி பெற்றதாக டிவிட்டரில் பதிவை வெளியிட்டு வந்தார். தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது என்று கூறியது. டிரம்பால் நியமிக்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை ஜோ பைடனை தேர்தல் வெற்றியாளராக உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அதிபர் அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைகளை அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் டிவிட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தோல்வியை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிகாரப் பெறுப்பை ஜோ பைடன் பெற்றாலும், நெருக்கடியான சூழலே நிலவும். கொரோனா பிரச்சினை, பொருளாதார சிக்கல் போன்றவை சவாலான சூழலைக் கொடுக்கும்.